துக்கவீட்டில் கேட்ட அலறல் சத்தம்... மாமியாரின் இறுதிச்சடங்கில் துடி துடித்து பலியான மருமகள்

 
ச்

கோவையில் மாமியாரின் துக்க நிகழ்வில், ப்ரீசர் பாக்ஸுக்கு வைத்த ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் முருக சுப்பிரமணியம், தனியார் நிறுவன ஊழியர். இவரது தாய் ராமலட்சுமி (83). இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து உடல் அவர்களது உறவினர்களின் அஞ்சலிக்காக பிரீசர் பாக்சில் வீட்டில் வைக்கப்பட்டது. இன்று உடல் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் இன்று மின்வேட்டு இருந்ததால் பிரீசர் பாக்ஸை இயக்க வாடகைக்கு ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டது. 

அதனை எடுத்து வந்த ஸ்ரீராம் (20) என்ற இளைஞர் ஜெனரேட்டருக்கு பெட்ரோல் ஊற்ற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் சிதறி பிரீசர் பாக்ஸ் அருகே வைத்திருந்த விளக்கில் பட்டு தீ பிடித்துள்ளது. இதில் பதற்றமடைந்த ஸ்ரீராம் பெட்ரோல் கேனை அங்கேயே தவறவிட்டார். இதில் தீ மலமலவென வீடு முழுவதும் பரவியது. இதனால் பதற்றத்தில் அங்கே இருந்த முருக சுப்பிரமணியத்தின் மனைவி பத்மாவதி (53), உறவினர் பானுமதி (50), மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரன் (55), பாலசுப்பிரமணியன், ஸ்ரீராம் (20) ஆகியோர் வீட்டிற்குள் சென்றது. இதில் உடலில் தீப்பிடித்து, புகை மூட்டத்தல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பானுமதி, ராஜேஸ்வரன், பாலசுப்பிரமணியன், ஸ்ரீராம் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே பரவிய தீயை அணைத்தனர். 

சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பத்மாவதி அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மாமியார் துக்க நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.