மருமகனுக்கு 101 வகை உணவு வகைகளுடன் விருந்து வைத்து அசத்திய மாமியார்..!!
தெலுங்கானாவில் ஒரு புதிய மருமகனுக்கு இந்த வருட தசரா பண்டிகை மிகச் சிறப்பாக அமைந்தது. பண்டிகையின் போது வீட்டிற்கு வந்த மருமகனுக்காக மாமியார் 101 வகையான உணவுகளை சிறப்பாக தயாரித்திருந்தனர். இருப்பினும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட எதிர்பாராத சவாலின் விளைவாக, மருமகனுக்கு உணவு விருந்தும், தங்க நாணயமும் கிடைத்தது.
வனபர்த்தி மாவட்டம் கோத்தகோட்டாவை சேர்ந்த குந்தா சுரேஷ் மற்றும் சஹானாலா தம்பதியின் மகள் சிந்துவிற்கும், நிகித் என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் தசரா பண்டிகையை ஒட்டி நிகித் மனைவி சிந்துவுடன் அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது புது மருமகன் நிகித்திற்கு 60 வகையான இனிப்புகள், 30 வகையான பேஸ்ட்ரிகள் மற்றும் 10 வகையான அரிசி உணவுகளை lஉட்பட 101 வகையான உணவுகளை அவரது மாமியார் பரிமாறி ஆச்சரியப்படுத்தினார்.
அப்போது 101 வகை உணவுகளில் ஒன்று குறைந்தால் என்ன செய்வீர்கள் என்று நிகித் நகைச்சுவையாக தனது மாமியாரிடம் கேட்டுள்ளார்.அப்போது 101 உணவுகளில் ஒன்று குறைந்தால் தங்க நாணயம் வழங்குவதாக அவரது மாமியார் அறிவித்தார்.
இதையடுத்து உணவுகளை நிகித் இருமுறை எண்ணி பார்த்தபோது 100 வகையான உணவுகள் இருந்ததால் அவரது மாமியார் தங்க நாணயத்தைப் பரிசளித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வேடிக்கையான சம்பவத்தை குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், இது வைரலானது. மருமகனின் புத்திசாலித்தனம் மற்றும் மாமியார் வார்த்தையைக் காப்பாற்றியதற்காக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.


