வாகன ஓட்டிகளே..! சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்.. 20 சாலைகளில் தேங்கிய மழைநீர்..
சென்னையில் இடைவிடாது கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும் கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலை முதல் தொடர்ந்து மழை தொடங்கியுள்ளது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, கோயம்பேடு, வடபழனி, பூவிருந்தவல்லி, மணலி, மீனம்பாக்கம், அடையார், பாலவாக்கம், அண்ணாநகர் , பெரம்பூர் என சென்னையின் அனைத்துப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை புறநகர் மாவட்டங்களில் ஆவடி, அம்பத்தூர்,திருநின்றவூர், தாம்பரம், செம்பரம்பாக்கம், போரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, வண்டலூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுமே கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
அதுவும் காற்று இல்லாமல் பலத்த இடி, மின்னலுடன் சன்னாமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழையால் சென்னையின் 20 சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேநேரம் சென்னையில் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர வேறு எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. இருப்பினும் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


