"இளையராஜா கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல" - ஜி.கே.வாசன்

 
tn

இசைஞானி இளையராஜா கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்று  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ilaiyaraj-a3

ப்ளூ கிராஸ் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம் மோடியும், அம்பேத்கரும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.  அதில் முன்னுரையாக இளையராஜா எழுதிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைந்துள்ளது . சமூகநீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.  அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து மிகப்பெரிய கனவு கண்டவர்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.  அம்பேத்கரையும், மோடியையும்  ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது . இளையராஜா தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில்,  மோடி - அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசைஞானி இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

gk

இந்நிலையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இசைஞானி இளையராஜா அவர்களின் கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. இசைஞானி இளையராஜா அவர்கள் தனது இசைத்திறமையால் தமிழ் நாட்டின் புகழை, இந்தியாவின் புகழை இசையின் மூலம் உலக அளவில் நிலைநாட்டி, பரப்புவது பெரிதும் பாராட்டத்தக்கது. பொதுவாக ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. இந்நிலையில் இது போன்ற கருத்துக்கு அரசியல் சாயம் பூசி சர்ச்சையாக்குவது சரியல்ல. தேசியத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பாராட்டுவதும், புகழ்வதும் புதிதல்ல, தவறல்ல. எனவே இசைஞானியின் சொந்த கருத்து சர்ச்சையாக்கப்படக்கூடாது என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.