எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நள்ளிரவில் கிடைத்தது நிபந்தனை ஜாமீன்..
நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் உள்ளிட்டோருக்கு நள்ளிரவில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான பிரவீன் ஆகியோரை கடந்த 16ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் அவர்கள் தலைமறைவாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அவரை சிபிசிஐடி போலீஸாரும் , வாங்கல் போலீஸாரும் கைது செய்து வழக்குபதிவு செய்தனர். கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நிலமோசடி தொடர்பான இரு வழக்குகளிலுல் இருந்தும் ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது இருவழக்குகளில் இருந்தும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைதானகாவல் ஆய்வாளர் பிருத்திவிராஜுக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.