எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு இந்தியாவுக்குப் பேரிழப்பு - விசிக அறிக்கை!!

 
thiruma

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , வேளாண் விஞ்ஞானி திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தனது 98 ஆவது வயதில் மறைவெய்தினார். உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்த அவரது மறைவு இந்தியாவுக்குப் பேரிழப்பாகும்.  அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

TN

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் அலை அலையாக ஏற்பட்ட உணவுப் பஞ்சங்களின் காரணமாக லட்சக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகும் கூட உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவடையவில்லை. பாரம்பரியமாக நாம் பயிரிட்டுக் கொண்டிருந்த கோதுமை, நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியவையாக இல்லை. அது மட்டுமின்றி மழையைத் தாக்கு பிடிக்கக் கூடியவையாகவும் அவை இல்லை. அதற்குக் காரணம் நமது நெல் ரகங்கள் உயரமானவையாகும் அதிக கதிர்களைத் தாங்க முடியாமல் சாய்ந்து விடக் கூடியவையாகவும் இருந்தது தான்.  இந்தப் பிரச்சினையை உணர்ந்த திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் கோதுமை மற்றும் நெற்பயிரின் உயரத்தைக் குறைப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என உணர்ந்தார். அப்படி புதிய குறைந்த உயரம் கொண்ட பயிரை உருவாக்கியபோது அவை அதிகளவு மகசூல் தரக்கூடியவையாக இல்லை. அந்த நேரத்தில் தான் அமெரிக்காவில் குறைந்த உயரம் கொண்ட கோதுமை ரகம் ஒன்று அதிக மகசூல் தருவதை அவர் அறிந்தார்.

tn

ஜப்பான் நாட்டில் பயிரிடப்பட்டு வந்த கோதுமை வகை ஒன்றை அமெரிக்காவில் ஒரு தாவரவியல் விஞ்ஞானி மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தின்மூலம் அதன் உயரத்தைக் குறைத்து அதிக மகசூல் தருவதாக மேம்படுத்தி இருந்தார். அதைக் கேள்விப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் அந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த விஞ்ஞானி நார்மன் பொர்லாக் என்பவரைத் தொடர்பு கொண்டு அவரை இந்தியாவுக்கு வரவழைத்தார். அவரது உதவியின் மூலமாக மெக்சிகோவில் பயிரிடப்படும் குட்டை ரக கோதுமை வகை இந்தியாவில் சோதனை முறையில் பயிரிடப்பட்டது . அப்போது அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம்  அதற்கு உதவியாக இருந்து ஊக்கமளித்தார். கோதுமையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பின் அதே முறையை நெல்வகையிலும் எம்.எஸ் சுவாமிநாதன் பரிசோதித்தார். அதன் அடிப்படையில் தான் ஐ.ஆர் 8 என்ற நெல் ரகம் உருவாக்கப்பட்டது. அந்த சோதனை முறை பாசுமதி நெல் ரகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு அவற்றின் உற்பத்தியும் பல மடங்காக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக நம்முடைய உணவு உற்பத்தி பல மடங்கு அதிகரித்தது.  இதைத்தான் பசுமைப் புரட்சி என்று நாம் அழைக்கிறோம் இதற்கு வழிகோலியவர் திரு எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் ஆவார்.  அதனால்தான் அவர் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுகிறார். 

Thiruma

எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுடைய முயற்சியினால் கோதுமை மற்றும் நெல் உற்பத்தியில் இந்தியா இன்று தன்னிறைவு பெற்றிருக்கிறது. அவர் விவசாயிகள்மீதும் அக்கறை கொண்டிருந்தார். விவசாயிகள் கடினமாக உழைத்து விளைவித்தாலும் விளைபொருட்களுக்குப் போதுமான விலை இல்லாத காரணத்தால் அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் உற்பத்தி செய்வதற்கு செலவிடும் தொகையைவிட 50% கூடுதலாக அவர்களுக்கு விலை கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ப குறைந்தபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அவர் அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்தார். திரு எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை நினைவுகூரும்போது அவர் வேளாண் துறையில் அறிமுகப்படுத்திய அறிவியல் பூர்வமாக சோதித்து உருவாக்கப்பட்ட புதிய கோதுமை மற்றும் நெல் ரகங்களின் மூலமாகத்தான் நமது உணவுப் பஞ்சம் தீர்க்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாரம்பரிய விவசாயம் என்ற பெயரில் தற்போது பழைய நெல் ரகங்களே நன்மை பயப்பவை என்பது போன்ற ஒரு எண்ணம் பரவலாக உருவாக்கப்படுகிறது. அது சரிதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இத்தகைய நெல் ரகங்கள் பயிரிடப்பட்ட காலத்தில் தான் நாம் உணவுப் பஞ்சத்தால் லட்சக்கணக்கான உயிர்களை இழந்தோம் என்பதை மறந்து விடக்கூடாது.  வேளாண் துறையில் அறிவியலைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்
திரு எம்.எஸ்.சுவாமிநாதன் நமக்குத் தந்து சென்றுள்ள செய்தியாகும். எல்லா தளங்களிலும் அறிவியல் சிந்தனையை உயர்த்திப்  பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் சிறப்பான அஞ்சலியாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.