கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய முருக பக்தர்கள் மாநாடு.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..!!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி சார்பில் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இன்று (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவில் மாநாட்டு முன் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகர் பின்னணியில் இருப்பது போன்று விழா மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு முருக பக்தர் மாநாடு அரங்கிற்கு வந்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் மற்றும் இந்து முன்னனியினர் வாகனங்களில் மதுரைக்கு வந்துள்ளன. சுமார் 10,000 வாகனங்கள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மாநகர காவல் ஆணையர் லோக நாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேள தாளம் வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் முருக பக்தர்கள் மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா மேடையில் முருகனின் புகழ் மற்றும் வரலாறு குறித்து பேசி வருகின்றனர்.


