திமுகவிடம் 5 தொகுதிகளை கோரும் முஸ்லீம் லீக்!
கூட்டணிக் கட்சிகளுடன் இன்று(பிப்.22) பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதிகளை இறுதி செய்தது திமுக. முஸ்லிம் லீக் கட்சியை முதல் கட்சியாக தொகுதி பங்கீடுக்காக அழைத்துள்ளது திமுக. திமுக கூட்டணியில் 2021 தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தரப்பில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் மதிமுக மற்றும் மமகவுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை இரட்டை இயக்கத்தில் தொகுதிகளை கேட்க மதிமுக திட்டமிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் 26-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக. இடதுசாரிகள் என அடுத்தடுத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ள திமுக, காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்துவதற்கான தேதி இன்னும் இறுதியாக வில்லை.

