“முதல்வருக்கு நல்லக்கண்ணு வணக்கம் வைத்தார்; உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்”- முத்தரசன்
முதலமைச்சருக்கு நல்லக்கண்ணு வணக்கம் வைத்தார், நல்லக்கண்ணு உடலில் நல்ல முன்னேற்றம் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை ராஜுவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்தும் முதலமைச்சர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கேகேஎஸ்எஸ்ஆர், தேரணி ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், “நல்லகண்ணு உடல்நிலை குறித்து தொலைபேசியில் தொடர்ந்து முதலமைச்சர் கேட்டறிந்து வந்தார். இன்று மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதலமைச்சர் நேரில் வந்து நலம் விசாரித்திருக்கிறார். அதிசயமாக இருக்கிறது முதலமைச்சர் நல்லகண்ணுவை பார்த்தபோது வணக்கம் செலுத்தினார், அதனை புரிந்து கொண்டு நல்லகண்ணுவும் முதலமைச்சர்க்கு வணக்கம் செலுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்லகண்ணு நேற்றைக்கு இருந்த நிலையிலிருந்து இன்று நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறார். படிப்படியாக நலம் பெற்று நல்ல நலத்துடன் இல்லம் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

மருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்தும், தீவிர சிகிச்சை அளித்தும் வருகிறார்கள். அவரை பழைய நிலைக்கு கொண்டுவர மிக தீவிரமாக பணியாற்றி வருவதை நன்றியோடு கூறிக் கொள்கிறேன். முதலமைச்சர் அமைச்சர்களுடன் நேரில் வந்து நல்லகண்ணுவை சந்தித்து உடல்நிலை விசாரித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. நேற்று மூச்சு திணறல் இருந்தது, இன்றைக்கும் மூச்சு திணறல் இல்லை. நல்ல நிலையில் இருக்கிறார். செயற்கை சுவாசம் இன்று கொடுக்கப்படவில்லை, இயல்பாக சுவாசிக்கிறார்” என்றார்.


