சாதிவெறி செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- முத்தரசன்
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சாதிவெறி செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள நம்பிக்கை நகர் 28 வயது இளைஞர் மதனும், பெருமாள்புரத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் உதய தாட்சாயினி ஆகியோர் ஒருவரை ஒருவர் விரும்பி, நேசித்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களது விருப்பம் இயற்கை நீதிப்படியும், சமூகநீதி சார்ந்த கொள்கை அடிப்படையிலும் அரசு சட்ட முறைகள் படியும் தவறானது அல்ல. ஏற்க வேண்டிய நியாயமாகும். ஆனால் சாதி வெறிக் கும்பல் ஒன்று, இல்லற வாழ்வை தொடங்க முனைந்த இருவரையும் பிரித்து வதைக்கும் சட்ட விரோத செயலில் சாதி வெறிக் கும்பல் ஈடுபட்டிருப்பதையும், இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் திருநெல்வேலி மாவட்டக் குழு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த வழக்கறிஞர் உட்பட முன்னணி தலைவர்களையும் தாக்கியும், மாவட்டக் குழு அலுவலகத்தை சூறையாடியுள்ள கொடூரக் குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும், இதன் தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்வதிலும், சாட்சியங்களை உறுதி செய்வதிலும் ஆவண சாட்சியங்களை பாதுகாத்து, நீதிமன்றத்தில் குற்றத்தை உறுதிப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதிலும் காவல் துறை சமரசமின்றி செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தொன்மை தமிழர் மரபுக்கு மாறாத சாதி வெறி கொண்டு, மனிதர்களை பிளவு படுத்தும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தமிழ்நாடு அரசு மேலும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கும் கடுமையான சட்டம் ஒன்றை வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், விரும்புரிமைப் படி திருமணம் செய்து கொண்டுள்ள மதன் - உதய தாட்சாயினி ஆகியோர் அச்சமின்றி வாழ்க்கை நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


