‘N-Convention அரங்கு இடிப்பு அத்துமீறல்.. நானே இடித்திருப்பேன்..’ - ஆக்கிரமிப்பு புகாருக்கு நடிகர் நாகர்ஜுனா மறுப்பு..
சட்டவிரோதமாக N-Convention அரங்கு இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளதாக நடிகர் நாகார்ஜுனா தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி வெள்ள காராக காட்சி அளிக்கும் நிலை உள்ளது. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என புகார்கள் எழுந்தது. இதனையடுத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரங்கநாதன் தலைமையிலான ‘ஹைட்ரா’ என்கிற குழுவை அமைத்து அ,மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.
இந்த அமைப்பு 2 வாரங்களாக ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் மாதப்பூரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபத்தை இடித்து தரைமட்டமாக்கினர். நடிகர் நாகார்ஜுனாவின் ‘என் கன்வென்ஷன்’ என்கிற திருமண மண்டபம் 3.30 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து இடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாகர்ஜுனா, “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது.
இன்று காலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன். நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை; ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்துள்ளார்.