“சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச் சென்று அடிப்போம்” என மிரட்டிய நா.த.க நிர்வாகிகள்
வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்த போது அங்குவந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு மாவட்ட செயலாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் நிலையில், தேவேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்து தேவேந்திரன், நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், யாரிடம் கூட்டு வைக்கவில்லையெனவும், தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை, படித்தவர்களை வேட்பாளராக முன்நிறுத்திய போது, அதை சீமான் மறுத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார். அப்போது அங்குவந்த நாம் தமிழர் கட்சியினர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ் என்பவர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சரமாரியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்ட நிகழ்வு வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.