விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான சின்னத்தை அறிவித்த சீமான்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவி டெபாசிட் இழந்தது.

இருப்பினும் ஆறு தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்து கவனம் ஈர்த்துள்ளது. கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ,ஈரோடு ,திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் அதிமுகவையும் , இரண்டு இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸையும் , தலா ஒரு இடங்களில் பாஜக , பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 8.22% வாக்கு சதவீதத்தை பிடித்து மாநில அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வழக்கமாக 2019, 2021 தேர்தலின்போது கொடுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டது. அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டும் அதை வைத்து குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றது.
![]()
மாநில அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சி, தனக்கு விரும்பிய சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெறலாம். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி சின்னத்திலேயே போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மாநில அங்கீகாரம் பெற உதவிய சின்னம் `மைக்'தான் தனக்கு ராசியாக இருப்பதாக எண்ணி சீமான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.


