‘ஆட்சியில் பங்கு கொடுக்க ஏமாளிகள் இல்லை’ - இபிஎஸ் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!
‘ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்னும் ஏமாளிகள் அல்ல’ என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பிரச்சாரப் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து உரையாடி வருகிறார். அவ்வாறு மக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் (அதிமுக) யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்; அது எங்கள் விருப்பம். அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது. அதிமுக வெற்றி பெற்றால் பாஜவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்களா? என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்களைப் போல வாரிசுக்காக ஆட்சிக்கு வர நாங்கள் துடிக்கவில்லை.” என்று பேசியிருந்தார்.

ஒரு பக்கம் கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கும் நிலையில், எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னாரே தவிர, கூட்டணி ஆட்சி அமையும் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை என பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து மீண்டும் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “எடப்பாடி பழனிசாமி பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. ‘நீங்கள் கட்சியை அடகு வைத்துவிட்டுப் போய்விடுவீர்கள்’ என்று திமுகவினர் கேட்கிறார்கள். ‘அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும்’ என்று பேசியதற்கு அவர் பதில் அளித்துள்ளார். இதில் உள் அர்த்தம் எதுவும் கிடையாது. நான் காலையிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் பேசினேன். எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்” என்று தெரிவித்தார்.


