ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல- நயினார் நாகேந்திரன்
பழனி முருகன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் ஒரு தபால்காரர் என முதல்வர் கூறுகிறார். ஆளுநர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம். அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல. சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதற்கான பணிகளை செய்வதற்கான நேரம் குறைவாக உள்ளது. அதனால் நான் எந்த யாத்திரையும் மேற்கொள்ள திட்டம் தீட்டவில்லை” என்றார்.
மலையடிவாரத்தில் திருவாவினன்குடி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நைனார் நாகேந்திரன் வந்தபோது கட்சி தொண்டர்கள் மற்றும் பாஜகவினர் பத்துக்கு மேற்பட்ட கார்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். மேலும் தலைவருக்கு வரவேற்பு அளிப்பதாக கூறி சாலையை மறைத்து பாஜகவினர் நின்று பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாத முடியாதவாறு இடையூறு செய்தனர். அதேபோல ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தபோது நயினார் நாகேந்திரன் உடன் பத்திற்கு மேற்பட்ட பாஜகவினர் சென்று ரோப்காரில் முந்தியடித்துக் கொண்டு இடம் பிடித்து சென்றனர். பாஜகவினரின் செயல்கள் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


