“எம்ஜிஆர் வழியில் விஜய் என செங்கோட்டையன் பேசியது வேடிக்கையாக இருக்கு”- நயினார் நாகேந்திரன்
மத்தியஅரசு எந்த திட்டம் அறிவித்தாலும், எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து பேசுவதே முதல்வர் ஸ்டாலினின் முதல் வேலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாவது, இதை தவிர நாலே முக்கால் ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு ஏதாவது செய்தாரா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஆளுநர் மாளிகை மக்கள் மாளிகையாக மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசி இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் - இந்த பெயர் மாற்றம் தேவையில்லாதது , சிந்தனையும் செயலும் தான் தேவை என்று ஸ்டாலின் பேசியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆட்சிக்கு வந்த நாலே முக்கால் வருஷத்தில் மத்தியஅரசு எந்த திட்டத்தை தொடங்கினாலும் , எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் வேலை, மற்றொன்று உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முதல்வர் ஆக்க வேண்டும் என்ற எண்ணம். இதை தவிர முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை
ஆளுநர் மாளிகையில் பெயர் மாற்றத்தில் குறைபாடு கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை என பேசிய நயினார் நாகேந்திரன், அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் தான் செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றதாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு. சேகர்பாபுவை பார்த்து பேசிவிட்டு தான் செங்கோட்டையன் போயிருக்கிறார். அல்லது முதல்வரை பார்த்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு உடன் பேசிவிட்டு சென்று இருக்கிறாரா? மக்களை குழப்புகிற வேலையைத்தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலையாக செய்து வருகிறார் என்று பேசினார்.
பாஜகவின் ஸ்லீப்பர்சல் தான் செங்கோட்டையன் என்ற கேள்விக்கு. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து பேசி விட்டு தான் செங்கோட்டையன் தவெகவிற்கு சென்று இருக்கிறார். என்ன பேசிவிட்டு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. எம்ஜிஆர் வழியில் தவெக தலைவர் விஜய் என்று செங்கோட்டையன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, இதைவிட வேடிக்கையான விஷயம் ஒன்றும் இருக்க முடியாது. செங்கோட்டையன் அவர்களை பற்றி பெருமையாக பேசி கொண்டிருந்தோம். எம்ஜிஆரின் வழி என்ன? விஜயின் வழி என்ன?எம்ஜிஆரின் கொள்கை என்ன?, விஜயின் கொள்கை என்ன? இது கூட செங்கோட்டையனுக்கு தெரியவில்லையா என்றார். தேனி மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக வரும் நீங்கள் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தேனி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நிறைய வேட்பாளர்கள் உள்ளனர். என வலதுபுறத்திலும் இடது புறத்திலும் இருக்கும் ஆட்களை சொல்லி காட்டிவிட்டு இப்போது எல்லோரும் மரியாதையாக வந்து போய் கொண்டிருக்கிறார்கள், போட்டியிடுவேன் என்று சொன்னால் அவ்வளவுதான் என்று பேட்டியை முடித்தார்.


