ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, அன்னாரின் பெயரைச் சூட்டிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அன்னார் அவர்கள் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, அன்னாரின் பெயரைச் சூட்டிட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/1tdvX2zJnC
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 26, 2024
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு "தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்” எனப் பெயரிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.


