நாங்குநேரி கொடூரம்: ஜவாஹிருல்லா கண்டனம்

 
tn

நாங்குநேரி கொடுமை  பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று  ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச்  சேர்ந்த மாணவன் சின்னதுரையின்  வீட்டுக்குள்  புகுந்த சாதிவெறிக் கும்பல்  அவரையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டி சாய்த்த கொடுமை  பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

tn

இதைத் தடுக்க வந்த ஒரு முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதும் வேதனைக்குரிய நிகழ்வாகும்.சின்னத்துரை உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாங்குநேரி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் மத்தியில் சாதி மற்றும் மத ரீதியான பிளவுகள் ஏற்படாத வண்ணம் இன்னும் கூடுதலாக திட்டமிடுதலை அரசும் சமூக அமைப்புகளும் எடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை இந்த கொடிய சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. 

jawahirullah

சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்றும் பாடங்களில் பயிற்றுவிக்கப்பட்டாலும் சமூகத்தின் வழியே மாணவர்களின் மனங்களில் தீண்டாமை எண்ணங்கள் வேர் விட்டு வளர்ந்து வருவது எதிர்கால சமூகத்திற்கு மிகப்பெரும் கேட்டை விளைவிக்கும். சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க பாடத்திட்டங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சாதி மற்றும் மத ரீதியான மோதல்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் திரைப்படங்கள் உட்பட ஊடகங்கள் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு சாதிக்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதோடு இத்தகையக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் இறங்கிடவேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.