அமைச்சர் பொன்முடிக்கு அன்பில் மகேஷ் செக்- பாஜக விமர்சனம்

 
narayanan stalin

உட்கட்சி அரசியல் அரசின் உச்சத்துக்கு வந்து விட்டதா? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

narayanan thirupathi

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள். இந்த விவகாரம் குறித்து பல்வேறு காரணங்களை, கதைகளை அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், ஒரு புதிய கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள். இது உண்மையென்றால், மாற்றுச் சான்றிதழ் (TC) பெறாமல் ஐ டி ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எப்படி சேர்ந்தார்கள் என்பதற்கு விசாரணை நடத்த உத்தரவிடுமா தமிழக அரசு? அப்படி சேர்த்த கல்லூரிகள் தகுதி நீக்கம் செய்யப்படுமா? அவை அரசு கல்லூரிகளாக இருந்தால் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பீர்களா அன்பில் மகேஷ் அவர்களே? இது ஒட்டு மொத்த நிர்வாகமே செயலிழந்து போய் விட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா?

 மேலும், அப்படி சேர்ந்த மாணவர்களின் பெயரில் அரசின் சலுகைகள் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வீர்களா அன்பில் மகேஷ் அவர்களே? பள்ளிகளில் பயில்வதாக சொல்லப்படும் மாணவர்கள் அதே வேளையில், உயர்கல்வி நிலையங்களில் படிப்பதாக சொல்வது முன்னுக்கு பின் முரணானது இல்லையா? அமைச்சர் பொன்முடிக்கு இப்படி ஒரு 'செக்' வைத்து விட்டீர்களே அன்பில் மகேஷ் அவர்களே? உட்கட்சி அரசியல் அரசின் உச்சத்துக்கு வந்து விட்டதா? இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மெளனம் அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.