ஏரி, குளம், குட்டைகளை கூறு போட்டு விற்ற அரசியல்வாதிகள் - நாராயணன் திருப்பதி காட்டம்!

 
narayanan thirupathy narayanan thirupathy

தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடந்த 50 வருடங்களில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 50 வருடங்களில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். நீர் போகும் பாதைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி பல்லாயிரம் கோடிகளை பெருக்கிக் கொண்டனர். சென்னைவாசிகளோ, சொந்த வீட்டு  கனவில், அவை ஆக்கிரமிப்பில், நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிந்தும் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து விட்டு பெருமழை பெய்யும் போது இன்னலுக்குள்ளாகும் போது அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் நொந்து கொள்வது காலம் கடந்த செயல். 


நீதிமன்றங்கள் நீர்நிலைகளை அகற்ற உத்தரவிடும் போது, கையூட்டு கொடுத்தாவது தங்களின் சொத்தை காப்பாற்றி கொள்ள அதே அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை வாசிகள். பணத்துக்காக சொத்தை உருவாக்கிய அரசியல்வாதிகளை, அதிகாரிகளை நொந்து கொள்வதா? அல்லது சொத்துக்காக பணத்தை இழந்த பொது மக்களை நொந்து கொள்வதா? இது ஒரு தொடர்கதை. இதற்கில்லை முடிவுரை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.