அநியாயம்...மக்கள் விரோதம்...ஆவினில் கொள்ளையோ கொள்ளை - நாராயணன் திருப்பதி ஆவேசம்
ஆவினில் ஆன்லைன் கட்டணத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆவின்' பால் அட்டையை ஆன் லைனில் மட்டுமே வாங்க வேண்டும் என எழுதப்படாத விதி உள்ள நிலையில், அரை லிட்டர் பால் அட்டை வாங்கினால் கூட ஆன்-லைன் கட்டணமாக ஒவ்வொரு மாதமும் ரூபாய் 18/- வசூலிக்கப்படுவது அநியாயம்/ மக்கள் விரோதம்/ கொள்ளையோ கொள்ளை. ஆவின் நிர்வாகம் உடனடியாக இந்த கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் பழைய முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆவின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொருவரும் ரூபாய் 18/- எதற்காக அளிக்க வேண்டும்.
இது மக்கள் விரோத கொள்ளையோ கொள்ளை. இதனால் மட்டுமே பல லடச்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ஆவினுக்கு கிடைக்கும். இது சராசரியாக ஒரு லிட்டருக்கு சுமார் 50 பைசா முதல் ரூபாய் 1/- வரையிலான விலை உயர்வு. எந்த சாக்கு போக்கும் சொல்லாமல், உடன் ஆவின் நிர்வாகமும், மாநில அரசும் ஆன்-லைன் கட்டணத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


