சிங்கார சென்னையை அசிங்கப்படுத்துபவர்களை மாநகராட்சி கேள்வி கேட்குமா? - நாராயணன் திருப்பதி கேள்வி

 
narayanan thirupathy

சிங்கார சென்னை என்று சொல்லிவிட்டு அசிங்க சென்னையாக மாற்ற முயற்சிக்கும் சில பொறுப்பற்றவர்களை  மாநகராட்சி நிர்வாகம் கேள்வி கேட்குமா? என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், சில வருடங்களுக்கு முன் 'சென்னையில் வனம்' எனும் கருத்தில் சில  இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் 'மியாவாக்கி வனங்களை' உருவாக்கியது சென்னை மாநகராட்சி. பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை, செடி, கொடிகளை வளர்த்து சென்னை நகரத்து மையத்தில் அற்புதமான சூழ்நிலையை ஏற்படுத்தியதால், இந்த வனங்களில் அந்தந்த பகுதி மக்கள் காலை, மாலை வேளைகளில்  நடைப்பயிற்சி மேற்கொள்வதை பெரிதும் விரும்புகின்றனர்.சமீபத்திய புயலால் பல மரங்கள் வீழ்ந்தும், சில வனங்கள்  முறையான பராமரிப்பு இல்லாமலும் பொலிவிழந்து போயின. இதை காப்பாற்றி, பராமரிக்க வேண்டிய மாநகராட்சி கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கிறது.

narayanan thirupathi

இந்த புகைப்படத்தில் இருப்பது அடையாறு சென்னை கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்திலிருந்து இந்திராநகர் ரயில் நிலையம் வரையிலான மியாவாக்கி வனம். இந்த நுழைவாயிலின் முன் குப்பை கூளங்கள், கழிவுகள் உள்ளிட்டவைகளை கொண்டு பெரும் குப்பைக்கிடங்கை மாநகராட்சி உருவாக்கி வருவது அலட்சியம் மட்டுமல்ல, அராஜகமும் கூட. பல முறை புகார் செய்தும் தொடர்ந்து இந்த அநியாயத்தை சென்னை மாநகராட்சி செய்து வருவது அத்துமீறல். ஒரு நல்ல சூழலை உருவாக்கி விட்டு அதை முறையாக பராமரிக்காமல் சீர்கெடுப்பது சென்னை மாநகராட்சிக்கு கைவந்த கலை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. 


குப்பைகளை, கழிவுகளை குப்பைக்கிடங்குகளில் கொட்டுவதை விட்டு விட்டு அருகில் இருக்கிறது என்று  பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் விட்டு செல்வது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்ற பொது அறிவு இல்லாமல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிங்கார சென்னை என்று சொல்லிவிட்டு அசிங்க சென்னையாக மாற்ற முயற்சிக்கும் சில பொறுப்பற்றவர்களை கேள்வி கேட்குமா மாநகராட்சி நிர்வாகம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.