மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் - நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

 
narayanan thirupathy

மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதம மந்திரியின் மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகத்தினரின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய கடந்த நவம்பர் மாதம் ரூபாய்.24,000 கோடி திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதனடிப்படையில் இந்தியாவில் 75 பின்தங்கிய பழங்குடி சமூகத்தினர் 28 லட்சம் பேர் 18 மாநிலங்களில், 220 மாவட்டங்களில்,22,544 கிராமங்களில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் இது செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நகரங்கள் மற்றும் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விலகி  நீண்ட தூரத்தில், வனப்பகுதிகளில்,சிறிய கிராமங்களில் வாழ்வதால், அனைவருக்கும் வீடு, மின்சாரம், சுகாதாரம், குடிநீர், இணைய சேவை, கல்வி, சத்துணவு கூடங்கள், பல்நோக்கு மையங்கள், வாழ்வாதாரம் செழிக்க வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இந்த திட்டம் இந்த சமூகத்தினரிடையே கொண்டு சேர்க்கும். 

இந்த திட்டத்தின் கீழ், மின் இணைப்பை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வழங்குகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசின் சார்பில் செயல்படுத்துவது மத்திய அரசின் பொது துறை நிறுவனமான REC Ltd. இந்த திட்டம் எப்படி அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை காண்பதற்கு தான் நேற்று நீலகிரி மாவட்டம், பந்தலூர் கிராமத்தில் உள்ள கையுண்ணி PRF காலனிக்கு சென்றிருந்தோம்.  இது வரை வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால், அவ்வீடுகளில் பல உடைப்புகள், வெடிப்புகள், திட்டப்படி தரைகள் இல்லை. இரண்டு அல்லது மூன்று அறைகள் இருந்தாலும் சமையலறைக்கு தேவையான வசதிகள் இல்லை. குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று வரை குடி நீர் வரவில்லை. கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால், அதை பயன்படுத்த நீரில்லை என்பது மாநில அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. கட்டி முடிக்கப்பட்டு ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வேதனைக்குரியதாக தான் தொடர்கிறது. இந்நிலைக்கு முழுக்காரணம் தமிழக அரசு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. மின்சார திட்டத்தின் அடிப்படையில், மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

narayanan thirupathi

பிரதம மந்திரியின் சுகாதார திட்டத்தில் காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இந்த பயன்கள் அந்த மக்களுக்கு சென்றிருந்தாலும் கூட, மத்திய அரசின் நிதி பெற்று ஒப்பந்ததாரர்களை நியமித்து பணிகளை கண்காணித்து திட்டத்தினை செயல்படுத்துவது மாநில அரசே. ஆனால், அவற்றை முறையாக செய்யாமல் மக்களை வாட்டி வதைப்பது நியாயமல்ல. கழிப்பறைகள் இருந்தும் பெண்கள் உட்பட அனைவரும் வயல் வெளியில் செல்லும் அவல நிலை தொடர்கிறது. குடிநீர் குழாய் இருந்தும் குடிக்க நீர் இல்லை என்பது வேதனை. சாலை வசதிகள் இல்லை.  
மிகவும் பின்தங்கிய மக்களின் மீது கவனம் செலுத்தி மத்திய அரசு திட்டம் தீட்டி, நிதி அளித்தாலும் அவற்றைஒப்பந்ததாரர்கள்  முறையாக செயல்படுத்தினார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய அரசு, அரசு அதிகாரிகள் கடமையிலிருந்து தவறி விட்டதாகவே நான் கருதுகிறேன். உரிய தரத்தில் இவை கட்டப்படவில்லை என்பதில் சந்தேகமேயில்லை. இதை கட்டிய ஒப்பந்ததார்களின் மீதும், அந்த பகுதியின் தொடர்புடைய அதிகாரிகளின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மக்களை, மக்களின் அடிப்படை தேவைகளை அலட்சியப்படுத்தியதோடு, அதில் முறைகேடும் நடந்திருப்பது வெட்கக்கேடு.

அங்கிருந்து மதியம் புறப்பட்டு வனப்பகுதிகளில் பயணித்து வன விலங்குகளை பார்த்து ரசித்து கொண்டே மிக மோசமான சாலையில் சிறியூர் கிராமத்தை  சென்றடைந்தோம். அங்கும் அதே நிலை. சூரிய ஒளி திட்டத்தோடு கூடிய பசுமை குடில் என்ற பெயரில் வீடுகள், ஆனால், சூரிய ஒளி மின் திட்டம் இல்லை. கழிப்பறைகள் என்ற பெயரில் ஒரு சுவரை கட்டி வைத்திருக்கிறார்கள். குடிநீர் குழாய் உள்ளது. இணைப்பு இல்லை, தண்ணீர் இல்லை. ஆனாலும், REC Ltd மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் முயற்சியில் இது வரை மின் இணைப்பு இல்லாத வீடுகள் வெளிச்சம் பெற்றுள்ளன. மக்கள் அதிகம் வாழும் பகுதியிலிருந்து வனங்களுக்கு மத்தியில், மிருகங்களுக்கு இடையில் விவசாயத்தையே நம்பி வாழும் இந்த பகுதி மக்களுக்கு இது வரை பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதி செல்லவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. பயனாளிகளை அடையாளப்படுத்தி இதை கொண்டு சேர்க்க வேண்டிய மாநில அரசு அதிகாரிகளின் அலட்சியம் அவலத்தின் உச்சக்கட்டம். நம்முடன் வந்திருந்த நீலகிரி மாவட்ட தலைவர் உடனடியாக இந்த மக்களின் குறைகளை போக்குவதற்கு உரிய மாநில அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க போராடப்போவதாக உறுதி கூறினார். இந்த கிராம மக்களின் கோரிக்கை சாலை வசதி, ஆனால், இரண்டரை ஆண்டுகளாகியும் சென்னையில் கூட சாலைகளை அமைக்க முடியாத அரசு எங்கிருந்து இந்த மக்களை கண்டு கொள்ளப்போகிறது என்ற எண்ணத்துடன், மக்களிடம் பிரதம மந்திரி கிராம சாலைகளின் திட்டத்தில் விரைவில் இந்த கிராமத்திற்கு தரமான சாலை வரும் என்று உறுதியளித்து விட்டு மீண்டும் அந்த வன சாலையில் பயணித்து ஊட்டி வந்தடைந்தோம். 


மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை கொடுத்து விட்டாலும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒப்பந்ததார்களின் குரூர வர்த்தக நோக்கத்தால் அரசின் குறிக்கோள் நிறைவேறாமல் போவது வருத்தமே. இவ்வளவு பணம் செலவிட்டும் யாரோ ஒரு சிலரின் தவறால் பயன்பாடு முழுமையாக நிறைவேறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உடனடியாக அனைத்து வீடுகள், மற்றும் குடிநீர் இணைப்புகள், சாலைகள்  உள்ளிட்ட அனைத்து பயன்களும் முறையாக, தரமாக  சென்று சேர்ந்திருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.