சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள்!

சென்னையில் வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் சென்னையில் பெய்த கன மழையால் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. சுமார் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. வேளச்சேரி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மழை நீரை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை நீர் புகுந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து 3 நாட்களாக நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், மக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், தேசிய மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. அதிநவீன கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து அவர்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். மாநகராட்சி சார்பில் ஏற்கனவே மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. மணலி, தாம்பரம், பெரும்புலிபாக்கத்திற்கு தலா ஒரு குழுவினர் மீட்பு படைகள் சென்றுள்ள நிலையில் மேலும் மூன்று படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.