நீட் தேர்வு சமவாய்ப்பற்றது; சி.பி.எஸ்.இ-க்கு சாதகமானது.. நீக்கப்பட வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்..

 
அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு சிபிஎஸ்இ-யில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமானது, சமவாய்ப்பற்றது என்பதால் அதனை நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் குற்றச்சாட்டு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்த ஆய்வில் அத்தேர்வு ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது உறுதியாகியுள்ளது.

2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் முதல் 50  இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விரிவான ஆய்வு நடத்தியுள்ளது. அவர்களில் 38 மாணவர்களை தொடர்பு கொண்ட அந்நாளிதழின் செய்தியாளர்கள், அவர்கள் படித்த பள்ளி, கல்வி வாரியம், நீட் தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்களை சேகரித்திருக்கின்றனர். அந்தப் பட்டியலுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு மாணவர் பிரபஞ்சன் குறித்த விவரங்களையும் சேர்த்தால் 39 சாதனை மாணவர்களின் விவரங்கள் உள்ளன.

நீட் தேர்வு

மொத்தமுள்ள 39 மாணவர்களில் ஒருவர் கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள் கிடையாது. அவர்களில் 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள்; ஐவர் ஆந்திர மாநில பாடத்திட்ட பள்ளிகளிலும், மூவர் மராட்டிய மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளிலும், இருவர் மேற்குவங்க மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளிலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட  39 பேரில் 29 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதி மாணவர்கள். 8 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். பிற வகுப்பினர் எவரும் இதில் இல்லை.

சாதனை மாணவர்கள் 39 பேரில் 38 பேர் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்பு பயிற்சி பெறாதவர். ஆனாலும் கூட, ஆகாஷ் ஜூன் என்ற அந்த மாணவர், தில்லியின் புகழ்பெற்ற தில்லி பொதுப்பள்ளியில் படித்தவர். சாதித்த 39 மாணவர்களும் தில்லி, புனே, சென்னை, கொல்கத்தா, நாக்பூர், கோட்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரப்பகுதிகளை சேர்ந்தவர்கள். அனைவருமே பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  ஆவர்.

மேற்குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 39 மாணவர்களைப் பற்றியது என்றாலும் கூட,  நீட்டில் வென்று மருத்துவப் படிப்பில் சேரும் அனைவருக்கும்  இது பொருந்தும். இதிலிருந்தே நீட் தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது இரு ஆண்டுகளாவது சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது என்பதை உணர முடியும். நகர்ப்புறங்களைச் சேர்ந்த பணக்கார மாணவர்கள் நகரின் மிகச்சிறந்த பள்ளிகளில் படிக்கக் கூடியவர்கள்; அவர்களால் பள்ளிகள், பயிற்சி மையங்கள் என லட்சக்கணக்கில் செலவழிக்க முடியும்.

நீட் தேர்வு

ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் வாழ்வதற்கே வசதியின்றி தினமும் கூலி வேலை செய்து கொண்டே அரசு பள்ளிகளுக்கு சென்று படிக்கக் கூடியவர்கள். அவர்கள் படிக்கும் பள்ளிகளில் அறிவியல் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களும் இருக்க மாட்டார்கள்; தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்ல அவர்களுக்கு வசதியும் இருக்காது. இப்படிப்பட்ட எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மாதிரியாக நீட் தேர்வை எழுத வேண்டும் என்பது எப்படி சரியாக இருக்கும்? ஆமைகளும், முயல்களும் எவ்வாறு ஒரே போட்டியில் பங்கேற்க முடியும்? இதில் சமவாய்ப்பு எங்கு இருக்கிறது?

முதல் 50 இடங்களுக்குள் வந்தவர்களில் சுமார் 74 விழுக்காட்டினர் சி.பி.எஸ்.சி பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள். 13% ஆந்திர பாடத்திட்டம், 8% மராட்டிய பாடத்திட்டம், 5% மேற்கு வங்க பாடத்திட்டத்தில் படித்தவர்கள். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் உள்ளிட்ட பெரும்பான்மையான பிற பாடத்திட்டங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. எல்லா மாணவர்களும் பணக்காரர்கள், 74 விழுக்காட்டினர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், அனைவரும் நகரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 98 விழுக்காட்டினர்  சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இப்படியாக சாதித்தவர்களுக்கும், சாதிக்க முடியாதவர்களுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு இருக்கும் நிலையில், இருவரையும் மோத விடுவது நியாயமா?

நீட் தேர்வு எதற்காக அறிமுகம் செய்யப்படுகிறது? 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் போது, மருத்துவப் படிப்புக்கு எதற்காக தனி நுழைவுத்தேர்வு என்பன போன்ற வினாக்களை பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பியது. அதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, ‘‘வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. அப்பாடத்திட்டங்களின்படியான மதிப்பீடு வேறுபடும் என்பதால் ஒரே மாதிரியான மதிப்பீட்டிற்காகத் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது’’ என்று கூறியது. அதை சரி என கொள்ளலாம்.

நீட் தேர்வு சமவாய்ப்பற்றது; சி.பி.எஸ்.இ-க்கு சாதகமானது.. நீக்கப்பட வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்..

மருத்துவம் படிக்க வருவோர் அனைவரும் ஒரே மாதிரியான அளவுகோலால் அளவிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரி என்றால், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பது தானே சரியானதாக இருக்கும்? அவ்வாறு இல்லாமல் வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கு போட்டி நடத்தினால், கல்வி வாய்ப்பிலும்,  பொருளாதாரத்திலும் சிறந்தவர்கள் தானே வெற்றி பெறுவார்கள்? அது தானே இப்போது நடந்திருக்கிறது? இது எந்த வகையில் சமூகநீதியாகவும், சமநீதியாகவும் இருக்கும்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

சம வாய்ப்பை வழங்காத, சி.பி.எஸ்.இ பாடத்திட்ட, தனிப்பயிற்சி பெறும், நகர்ப்புற, பணக்கார, உயர் வகுப்பினருக்கு சாதகமாக இருக்கும் நீட் தேர்வு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. எனவே, நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் சமவாய்ப்பற்ற நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.