அரசு மருத்துவமனையில் 4 வயது குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்!
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை உயிரிழந்த நிலையில், நீதி கேட்டு குழந்தையின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அரசு மருத்துவமனையில் 4 வயது குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை வட்டாச்சியரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


