நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கு- உதவி ஆணையர் சஸ்பெண்ட்
நெல்லையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட விவகாரத்தில் கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை டவுண் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்போது அவர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுண் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், நேற்று ஜாகீர் உசேன் பிஜிலி அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வைத்து கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இக்கொலையில் முக்கிய குற்றவாளியான தவுபிக் கின் மனைவி நூர நிஷவை பிடிக்க தனிப்படை திருவனந்தபுரம் விரைந்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக நேற்று ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது நெல்லை டவுன் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருமான செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


