பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு நேத்ரா குமணன் தேர்வு - ஜி.கே.வாசன் வாழ்த்து

 
gk vasan

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்குரியது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே/வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையான நேத்ரா குமணன் பாய்மரப் படகுப் போட்டியில் கலந்து கொண்டு, இறுதிச்சுற்றில் களம் இறங்கினார். இதில் 67 புள்ளிகள் பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்த நேத்ரா, ஒலிம்பிக் வாய்ப்டை உறுதி செய்தார்.

gk
இதன்மூலம், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். இதனால் தமிழகத்தின் விளையாட்டுத் திறமை உலக அளவில் போற்றப்படும். இந்திய நாட்டிற்கும் புகழ் சேர்க்கும். ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு, டோக்கியோ ஒலிம்பிக்கில் நேத்ரா குமணன் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ல் உலகக் கோப்பை படகோட்டும் போட்டியில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தார். இந்தியா சார்பில் படகோட்டும் போட்டியில் பதக்கம் வென்றிருக்கும் ஒரே பெண் என்ற பெருமையை தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் பெற்றார் என்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.

GK Vasan

தனது கடின உழைப்பு, பயிற்சி, விடா முயற்சி ஆகியவற்றால் இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பெற்றோர்களும், பயிற்சியாளரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற, சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.