சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் - மு.க.ஸ்டாலின் அடிக்கல்

 
mkstalin

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.42.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டடம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டடம் மற்றும் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடம் ஆகிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் சமூகப் பாதுகாப்புத் துறை மாநிலத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வகையான குழந்தை பராமரிப்பு நிறுவனங்களை நிறுவி பராமரித்து வருகிறது. சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் / முரணாக செயல்பட்ட சிறார்களை தங்கவைத்து பராமரிப்பு மற்றும் மறுசீராக்க பயிற்சிகளை அளிப்பதற்காக செயல்படும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் 37,146 சதுர அடி பரப்பளவில் 100 சிறார்கள்/இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 80,326.36 சதுர அடி பரப்பளவில் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் கட்டுவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இப்பயிற்சி மையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் அங்கன்வாடிப் பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் சமூகப் பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி/கல்லூரி மாணவ-மாணவியர்கள், குழந்தைகள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக செயல்படும் அனைத்து தரப்பினருக்கும், குழந்தைகள் மற்றும் மகளிர் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகார பரவலாக்கம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.