பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டர்? நொறுங்கிய புதிய கார்
சென்னை மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த அதிவேக கார் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றவர்கள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் கடைகள் மீது மோதிய கார் பின்னர் தலைகீழாக கவிழ்ந்தது.

மயிலாப்பூர் பஜார் ரோடு சாலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் புதிதாக அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் அருகிலிருந்த கடைகள் மீது மோதியது. விபத்துக்குப் பின்னர் கார் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருந்தது. காரை ஓட்டி வந்த இளைஞர் மற்றும் அவருடன் இருந்த நண்பரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றும் 24 வயதாகும் சஞ்சய் என்பதும், புதிதாக வாங்கிய காரில் தனது நண்பருடன் சென்றபோது பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், காரை ஓட்டிய நபர் மது போதையில் இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

