விடுதலை 2 படத்துக்கு புதிய சிக்கல்; வெற்றிமாறனுக்கும் நக்சலுக்கும் தொடர்பு இருக்கோ என சந்தேகம் எழுகிறது?- இந்து மகா சபா
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விடுதலை பாகம் இரண்டு திரைப்படத்தை தடை செய்யக்கோரியும், வெற்றிமாறனை கைது செய்ய கோரியும் இந்து மகாசபை சார்பில் இந்து மகா சபாதலைவர் எம்.ரமேஷ் பாபு செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சமீபத்தில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை பாகம் - 2 திரைப்படம் இளைஞர்களை அரசுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட தூண்டும் வகையில் படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நக்சல் என்பது இல்லை, அது இருந்த மாதிரியும் தமிழத்தில் பல கொடுமைகள் நடந்து உள்ளது போலவும் விடுதலை இரண்டாம் பாதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழக அரசும் தமிழக முதன்மை செயலாளரும் தவறாக வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆதரவளித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலமாக நக்சலைட்டுகள் 2000-க்கு பிறகு பிறந்த இளம் தலைமுறைகளுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கின்ற நோக்கத்தோடு படத்தை தயாரித்து உள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து தணிக்கை துறைக்கு புகார் அளிக்க உள்ளோம். வெற்றிமாறனுக்கு பின்புலமாக யார் இருக்கின்றார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். விடுதலை இரண்டாம் பாகத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்த படத்தை பார்த்த பிறகு ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கவுள்ளோம். நக்சல் அமைப்பு என்ற ஒன்று தமிழ்நாட்டில் இல்லை, ஆனால் இருக்கு என்று கூறியிருக்கிறார்” என்றார்.


