முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை!
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் வாங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை என்பதை பிரதான குற்றச்சாட்டாக குடும்ப அட்டைதாரர்கள் முன்வைத்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசும் இணைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மின்னணு எடை தராசானது, வைபை – புளூடூத் வாயிலாக பிஓஎஸ் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர் தராசில் வைக்கும் பொருளின் எடை தான், அந்த கருவியில் பதிவாகும். வழங்க வேண்டிய பொருட்களின் அளவு தராசில் காட்டப்படும் பொருட்களின் அளவு சரியாக இருந்தால் மட்டுமே பி ஓ எஸ் கருவி அடுத்த கட்ட செயல்முறைக்கு செல்ல முடியும்.
இதன் மூலம் சரியான எடைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் இதில் எடை குறைவாகவோ, கூடவோ வைக்க முடியாது என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது சோதனை அடிப்படையில் தற்போது சென்னையில் ஒரு சில கடைகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அனைத்து கடைகளிலும் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


