தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம்..

 
ration card ration card

புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.  அதுமட்டுமின்றி அரசின் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை, பரிசுத்தொகை உள்ளிட்ட  சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டுகள் அவசியமாகிறது.   தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதேபோல்  26 ஆயிரத்து 502 முழு நேர  கடைகள், 10,452 பகுதிநேர கடைகள் என மொத்த 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் உள்ளன. 

ration

அத்துடன் நாள்தோறும் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் புதிதாக 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணத்துள்ளனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட  திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமலும்,  பயன் பெற முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகினர். 
 
இந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களின்  விண்ணப்பங்களின் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் புதிய அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து  குடும்ப அட்டையில் மாற்றம், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் , புதிய அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற பணிகளை  www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.