புதிய விதிமுறை அமல் : இனி ஆர்.டி.ஓ., ஆபீஸ் வர தேவையில்லை..!
தமிழகத்தில் இயங்கி வரும் 150 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினமும் சுமார் 8,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டும் 3,000 முதல் 4,000 வரை உள்ளன. இதுவரை, புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அந்த வாகனத்தை உரிமையாளரோ அல்லது விற்பனைப் பிரதிநிதியோ வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இதனால், வாடிக்கையாளர்களிடம் டீலர்கள் இதற்காகத் தனிக் கட்டணம் வசூலித்து வந்தனர்.
மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி, 'சொந்த பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சலுகை தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சொந்த பயன்பாட்டிற்கான இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களை பதிவு செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் கொண்டு வரத் தேவையில்லை. இந்த புதிய உத்தரவை நாளை முதல் அமல்படுத்த வேண்டும் என, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். எனினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களைப் பதிவின்போது கட்டாயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


