ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களுக்கு புதிய விதிகள்! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பொதுக்கூட்டம் ரோட் ஷோ போன்றவற்றிற்கு அரசு பாதுகாப்பு வழிமுறைகளை வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்று தமிழக அரசை பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு அரசியல் கட்சிகள் அளித்த நெறிமுறைகளை பரிசீலனை செய்து தற்போது பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது..
அரசாணையில் கூறியுள்ளதாவது;
'' தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குப்படுத்துவதற்கும், நிர்வகிக்கும் வகையிலும் வழிகாட்டு முறைகளை வகுத்து அரசாணை வெளியிடப்படுகிறது.
5,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், சாலைக் காட்சிகள் (Road shows) மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த நடைமுறைகள் பொருந்தும்.
சாதாரண கூட்டங்களுக்கு குறைந்தது 10 முதல் 21 நாட்களுக்கு முன்னதாகவும், 50,000-க்கும் அதிகமானோர் பங்கேற்கும் பெரிய மாநாடுகளுக்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதனை உரிய காவல் நிலைய அதிகாரி அல்லது துணை கோட்ட காவல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
திடீர் சம்பவங்களால் நடத்தப்படும் போராட்டங்களுக்கு, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நிகழ்வு நடக்கும் 3 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் பெற்று அனுமதி வழங்கலாம்.
ரோடு ஷோ
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சாலைக் காட்சிகளை (Road shows) 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட மற்றும் அனுமதி வழங்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூட்டத்தின் அளவு 50% அதிகமாக இருந்தால், அது விதிகளின் கடுமையான மீறலாகக் கருதப்படும். மக்கள், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக அங்கே தேவையின்றி கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- சாலை காட்சிகள் (Road shows) துவங்கும் இடம், முடியும் இடம், பேசப்படும் இடம் குறிப்பிடப்பட வேண்டும். முக்கிய விருந்தினர்கள் தொடக்க இடத்திற்கு வரும் நேரம், முடியும் நேரம் குறிப்பிடப்பட வேண்டும். சாலையில் எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் குறித்து விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை நிறுவனத்திடம் எழுத்து பூர்வ அனுமதி பெறப்பட வேண்டும்.
- மேடைகள், தடுப்புகள் (Barricades), மின்சார இணைப்புகள் ஆகியவற்றின் உறுதித்தன்மைக்கு மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து சான்றிதழ் பெற்று, நிகழ்ச்சி தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக காவல்துறையிடம் ஏற்பாட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையுடன் இணைந்து போதுமான தீ பாதுகாப்பு வசதிகளைச் செய்ய வேண்டும்.
- வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். 50 வாகனங்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.
- ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் தடையின்றிச் செல்ல எப்போதும் வழிவிட வேண்டும்.
- டிஜிட்டல் பேனர்கள், பிளக் கார்டுகள் மற்றும் தற்காலிகக் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசின் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி (2011 மற்றும் 2025 விதிகள்) மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அதிக கூட்ட நெரிசலில் சிக்க விடாமல் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கெனத் தனிப் பகுதியும் (Enclosure), கவனித்துக் கொள்ளத் தன்னார்வலர்களும் ஒதுக்கப்பட வேண்டும்.
- கூட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விடத் தாண்டினால், 100 பங்கேற்பாளர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் தன்னார்வலர்களைக் கொண்டு கூட்டத்தை முறைப்படுத்த வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.
- உரையாற்றும் இடங்களில் சுமார் 500 அடி தூரத்திற்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். முக்கிய விருந்தினரின் வாகனத்தைச் சுற்றிப் பொதுமக்கள் நெரிசலாகக் கூடுவதைத் தவிர்க்கத் தடுப்புகள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.
- 500 நபர்களுக்கு 1 என்ற வீதத்தில் கழிப்பறையை அமைக்கப்பட வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 4 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
- பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டம் முடிந்தவுடன் அந்த இடத்தை அதன் பழைய நிலைக்குச் சுத்தம் செய்து ஒப்படைக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான பாதுகாப்பு கண்காணிப்பு குழு (District Level Event Safety Monitoring Committee) அமைக்கப்படும். இது அதிக ஆபத்துள்ள (High risk) கூட்டங்களைக் கண்காணிக்கும்.
- வட்டாட்சியர் நிலையில் சிறிய கூட்டங்களைக் கண்காணிக்க தாலுகா அளவிலான குழுக்கள் அமைக்கப்படும். ஒலி மாசு விதிகளைப் பின்பற்ற வேண்டும். கூம்பு வடிவ (Cone type) ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.
கூட்ட நெரிசலும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவது முற்றிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் பொறுப்பாகும்.
தன்னார்வலர்கள் நியமனம்: கூட்டத்தை முறைப்படுத்த ஒவ்வொரு 50 நபர்களுக்கும் ஒரு தன்னார்வலரை (Volunteer) ஏற்பாட்டாளர்கள் நியமிக்க வேண்டும்.
வருகை நேரம்: நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
எண்ணிக்கை கட்டுப்பாடு: எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% கூடுதலாக மக்கள் திரண்டால், அது விதிமீறலாகக் கருதப்பட்டு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது சுகாதாரம் மற்றும் வசதிகள்
பங்கேற்பாளர்களின் நலன் கருதி அடிப்படை வசதிகளைச் செய்து தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது:
குடிநீர் வசதி: ஒவ்வொரு 100 மீட்டர் இடைவெளியிலும் குடிநீர் வசதி இருக்க வேண்டும். ஒரு நபருக்கு தலா 4 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கழிப்பறை வசதி: 500 நபர்களுக்கு ஒரு கழிப்பறை மற்றும் ஒவ்வொரு 300 மீட்டர் சுற்றளவில் ஒரு நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவ உதவி: ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கான பிரத்யேகப் பாதையை உறுதி செய்ய வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்
முன்னுரிமை: கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதையும், நெரிசலான இடங்களில் அவர்கள் சிக்காமல் இருப்பதையும் ஏற்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
போக்குவரத்து: பேரணிகளின் போது சாலையின் ஒரு பாதியை மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.
தூய்மைப் பணி: நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, பழைய நிலைக்கேற்ப ஒப்படைக்க வேண்டியது ஏற்பாட்டாளரின் கடமையாகும்.
கூட்டத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைக்கப்பட வேண்டிய மருத்துவ வசதிகள்:
முதலுதவி மையங்கள் (First Aid Booths)
10,000 பேர் வரை - தேவையில்லை.
50,000 பேர் வரை - 1 மையம்.
5,00,000 பேர் வரை - 7 மையங்கள் இருக்க வேண்டும்.
மருத்துவக் குழு பொறுத்தவரையில் ஒவ்வொரு 25,000 பங்கேற்பாளர்களுக்கும் ஒரு மருத்துவக் குழு இருக்க வேண்டும். இதில் 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 2 துணை மருத்துவப் பணியாளர்கள் இடம்பெற வேண்டும்.
ஆம்புலன்ஸ் வசதி
10,000 பேர் வரை - 1 அடிப்படை உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் (BLS).
5,00,000 பேர் வரை - 6 BLS, 2 மேம்பட்ட உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள் (ALS) மற்றும் 3 அவசர கால முதலுதவியாளர்கள் இருக்க வேண்டும்.
சாலையின் ஒரு பாதியை போக்குவரத்திற்காக எப்போதும் காலியாக வைத்திருக்க வேண்டும். நிகழ்வின் முழுப் பகுதியையும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் மற்றும் அதன் பதிவுகளைக் காவல்துறையினருக்கு வழங்க வேண்டும்.
இந்த அரசாணை பொதுக் கூட்டங்களை முறைப்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்கிறது.'' என குறிப்பிடப்பட்டுள்ளது.


