புத்தாண்டு தினத்தில் சோகம் : சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து - 300 பேர் நிலை என்ன?
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொந்தனா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் திரண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் பார் மூடப்படவிருந்த நிலையில், சுமார் 1:30 மணியளவில் எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்தைத் தொடர்ந்து கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், வெளியேறும் வழிகள் தெரியாமல் கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பனிச்சறுக்குத் தலங்களுக்குப் புகழ்பெற்ற இப்பகுதியில் புத்தாண்டு அன்று இத்தகைய விபத்து நேரிட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், புகையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால சேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெடிவிபத்துக்கான காரணம் எரிவாயுக் கசிவா அல்லது அங்கிருந்த அலங்காரப் பொருட்களா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.


