அன்புமணிக்கு அடுத்த அதிர்ச்சி..!! லெட்டர் பேடில் இருந்தும் பெயர் நீக்கம் - ராமதாஸ் அதிரடி..
பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமாக வெளியிடும் நிர்வாகிகள் நியமன அறிவிப்பில், “நகல்: செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ்” எனக் குறிப்பிடப்படுவது வழக்கம். ஆனால் இன்று வெளியான நியமன அறிவிப்பில் அன்புமணி பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிகழும் பதவி மோதலில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திண்டாடி வருகின்றனர். என் மூச்சுக்காற்று அடங்கும் வரை நானே பாமவின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும், தனக்கே கட்சியில் முழு அதிகாரம் இருப்பதாகவும் ராமதாஸ் கூறி வரும் நிலையில், நான் தான் தலைவர் என அன்புமணி செயற்குழுவை கூட்டுவது, பொதுக்கூட்டம் நடத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். அதேநேரம் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவிநியமன கடிதங்களை வழங்கி அன்புமணி ஆதரவை பெருக்கி வருகிறார்.

இந்நிலையில் பாமக தலைமை நிர்வாக குழு கூட்டம் நேற்றைய தினம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. பாமக நிர்வாக குழுவில் இடம்பெற்றிருந்த வடிவேல் ராவணன், திலகபாமா, வழக்கறிஞர் பாலு ஆகியோர் நீக்கப்பட்டு புதியதாக மருத்துவர் ராமதாசால் நியமிக்கபட்ட நிர்வாகிகள் கொண்டு கூட்டம் நடத்தப்பட்டன. நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பெயர் இருந்த நிலையில் அவர் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். ஏற்கனவே இருந்த 19 பேர் கொண்ட நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதியதாக நிர்வாக குழு உருவாக்கப்பட்டது. இந்த புதிய நிர்வாக குழுவில் 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிர்வாக குழுவில் புதியதாக போடப்பட்ட பொதுச்செயலாம்ளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கரூர் பாஸ்கரன், சேலம் மேற்கு எம் எல் ஏ அருள் உள்ளிட்ட 21 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை. கட்சியில் ஏற்கனவே பல கூட்டங்களை புறக்கணித்த நிலையில் நிர்வாக குழு கூட்டத்தினையும் அன்புமணி புறக்கணித்ததால் அவரது பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளதாக கூறப்பட்டது. பாமகவின் செயற்குழு கூட்டம் வருகின்ற 8 ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமாக வெளியிடும் நிர்வாகிகள் நியமன அறிவிப்பில், “நகல்: செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ்” எனக் குறிப்பிடப்படுவது வழக்கம். ஆனால் இன்று வெளியான நியமன அறிவிப்பில் அன்புமணி பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் நிர்வாகிகளை நீக்குவதற்கும் போடுவதற்கும் முழு அதிகாரம் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வரும் நிலையில், அன்புமணியிம் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா? பாமகவில் அவர் வகிக்கும் பொறுப்பு என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர்.


