மோசடி புகார்களை தொடர்ந்து கல்லூரி பணியிலும் சர்ச்சையில் சிக்கிய நிகிதா..!!
திருப்புவனம் இளைஞர் அஜித் கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீது ஏற்கனவே மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், கல்லூயியிலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார். கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) , அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த 5 குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை மதுரை மாவட்ட 4வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்குமார் லாக் அப் கொலை விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா மீது கல்லூரியிலும் பல புகார்கள் எழுந்து, கடந்தாண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் HOD-யாக பணியாற்றி வரும் நிகிதா, தனது பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது, மாணவிகளிடம் மோசமான விதத்தில் நடந்துகொள்வது என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கி, அவரை இட மாற்றம் செய்ய மாணவிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.
அது தொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடமும் பல லட்சம் ரூபாயை நிகிதா மோசடி செய்திருப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது கல்லூரியும் அவர் மீது ஏராளமான புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


