பேருந்து விபத்து எதிரொலி - சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

 
accident

குன்னூர் அருகே மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. பேருந்து விபத்து தொடர்பாக 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி, ஓட்டுநர்கள் முத்துக்குட்டி, கோபால், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உட்பட 3 பிரிவுகளில் குன்னூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

குன்னூர் பேருந்து விபத்து- 4 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது, உதகை போன்ற மலைப்பாதைகளில் 35 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கக் கூடாது. மலை பிரதேசங்களில் வாகனம் இயக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மலைப்பாதையில் கீழ்நோக்கி இறங்கும் போது அடிக்கடி பிரேக் அழுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நாள் சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக தேவைக்கேற்ப கூடுதல் ஓட்டுநர்களை அழைத்து வரவேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.