"இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்குறீங்க? என்ற வாதமே தப்பு"- நிர்மலா சீதாராமன்

 
நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றது. 

Image

இதில் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து விளக்கமாக உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவி ஏற்ற பிறகு முழுமையான பட்ஜெட் இதுதான். அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான அடித்தளம் இந்த பட்ஜெட். இந்த முறை பட்ஜெட் போடுவதில் வெளிநாட்டு காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியமாக இருந்தது. அமெரிக்காவில் புதிய அதிபர் பொறுப்பு, அதன் பிறகு ஏற்படும் வர்த்தக நடவடிக்கைகள் ஏற்படும் மாற்றம், உக்ரைன் போர், சீனாவின் அதிக எலக்ட்ரிக்கல் வாகன உற்பத்தி காரணமாக சந்தையில் ஏற்படும் தாக்கம் என பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து நம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது.

இது ஒருபுறம் என்றால் தமிழ்நாடு அதிகமாக நிதி கொடுக்கிறது குறைந்த அளவிலேயே திரும்ப மத்திய அரசு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதற்கு விளக்கமான பதில் அளிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மத்திய அரசு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்துகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 1.7 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 58 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள 59 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 89 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்துள்ளது. 49 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு பொருளை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 79 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள் ரயில் பாதைகள் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் 4 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக வருவாய் வருகிறது. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் குறைந்த வருமானம் தான் வருகிறது. குறைந்த வருவாய் உள்ள அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கும் முன்னேற்றம் வேண்டியது அவசியம். ஆகையால் தான் பிரதமர் நாட்டில் எங்கு பின்தங்கிய மாவட்டமிருந்தாலும் அதனை முன்னேற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

வேளாண் உற்பத்தியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தால் அங்கு வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் சிறு தொழில்களை ஏற்படுத்தவும் தகுந்தது பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் உலக அளவில் சிங்கப்பூரில் திருவள்ளுவருக்கான மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை திமுகவும் காங்கிரஸ செய்ததில்லை. மத்திய அரசு நல்ல பல திட்டம் செயல்படுத்தி வரக்கூடிய வேளையில் அதனை திசை திருப்பும் வகையில், மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சனைகளை பேசி திசை திருப்பும் வேலையை செய்து வருகிறார்கள். என்னை பொருத்தவரையில் இங்கிருக்கும் ஊழல்களைப் பற்றி பேச எனக்கு விரும்பவில்லை. பட்ஜெட் குறித்து மட்டும் தான் பேச விரும்புகிறேன். இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள்? என்ற வாதமே தவறு” என்றார்.