என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம்..
நெய்வேலி என்எல்சியில் 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் 8,000 நிரந்தர தொழிலாளர்களும், 10,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் என்எல்சியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், நிரந்தர தொழிலாளர்களுக்கும் அதிகமாக போனஸ் வழங்கப்படுகின்றனர்,
இங்கு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், சொசைட்டி தொழிலாளர்களுக்கும் என்எல்சி நிர்வாகம் 8.33 சதவீதம் போனசாக வழங்குகின்றனர். இந்நிலையில் 20% போனஸ் வழங்கக் கோரி நெய்வேலி கியூபாலத்தில் இருந்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் நேற்று மாலை பேரணியாக சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய செல்போன் லைட் அடித்து கண்டன முழக்கங்களை எழுப்பி சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி மீண்டும் செல்ல முயன்றனர். அப்போதும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தொழிலாளர்கள் இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.