திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை - தவெக தலைவர் விஜய்
திமுக, பாஜகவுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி இலை என தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1200 பேர் பங்கேற்றிருந்தனர். காலை செயற்குழு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ல் நடந்ததை போல மிக பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர். திருச்சி அல்லது மதுரையில் இந்த மாநாட்டை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
5 மண்டலம், 120 மாவட்டங்கள் ,12500 கிளைகழகங்களில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டத்தை நடத்தவும், ஜூலை இரண்டாம் வார இறுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க வேண்டும் என்றும், வீட்டிற்கு ஒருவர் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் கட்சியை நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். அப்போது செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “தேர்தலில் பாஜக, திமுகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும். திமுக, பாஜகவுடன் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப் போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான , பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
தந்தை பெரியார் அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ, எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ” என்று தெரிவித்தார்.


