குறுவைத் தொகுப்புத் திட்ட பயனாளிகளுக்கு உச்சவரம்பு கூடாது - ராமதாஸ்

 
PMK PMK

குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும்  வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து  ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில்,  அங்குள்ள உழவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு வசதியாக  குறுவை சாகுபடி  தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலையில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று  நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும்,  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நியாயமல்ல.

pmk

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.78.67 கோடி மதிப்பிலான குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்படி, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல்  சாகுபடி செய்யப்படும் பரப்பளவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான்  விதை நெல் மானியமும், இயந்திர நடவு மானியமும் வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.  அதேபோல், உதவியை முழுமையாக வழங்காமல் பகுதியாக வழங்குவது  உழவர்களுக்கு பயனளிக்காது.

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படும். அவற்றில் சுமார்  2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்யும் வசதி கொண்டவை. அவ்வாறு இருக்கும் போது  2  லட்சம் ஏக்கருக்கும் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.  ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் உதவி வழங்கப்பட்டால், மீதமுள்ள ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை வைத்திருக்கும் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.


அதேபோல், குறுவைத்  தொகுப்பு உதவி முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது,  இயந்திரங்களைக் கொண்டு நடவு செய்வதற்காக ஆகும் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. அதற்காக  உழவர்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்கத் தேவையில்லை. ஆனால், இப்போது  இயந்திர நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.4000 மட்டுமே வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையை உழவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் மண் வளத்தை மேம்படுத்துவதற்காக  மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக ஜிப்சம் உரம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது  ஜிப்சம் மானியமாக ஏக்கருக்கு ரூ.250  மட்டுமே வழங்கப்படும்; அதுவும் 25000 ஏக்கருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இது உழவர்களின் தேவைகளை முழுமையாக தீர்க்காது.

இவை அனைத்திற்கும் மேலாக  குறுவை சாகுபடிக்கு அடிப்படைத் தேவையான மும்முனை மின்சாரம் எவ்வளவு நேரத்திற்கு தடையின்றி வழங்கப்படும் என்பது குறித்து  தமிழக அரசின் சார்பில் எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.  தடையற்ற மும்முனை  மின்சாரம் இல்லாமல்  குறுவை சாகுபடி செய்ய இயலாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி காலத்தில் குறைந்தது 16 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதை அரசு  உறுதி செய்ய வேண்டும்.  மேலும், குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும்.  இயந்திர நடவு மானியம்,  ஜிப்சம் உர மானியம்  ஆகியவற்றை முழுமையாக  வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.