"மத்திய அரசிடமிருந்துதான் மின்சாரம் கொள்முதல்"- மின்வாரியம் தகவல்
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் எந்த வணிக தொடர்பும் இல்லை என தமிழ்நாடு மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காதபட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு உருவாக்குகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சாரம் தொடர்பாக எந்த நேரடித் தொடர்பிலும் இல்லை. Solar Energy Corporation Of India (SECI) என்ற ஒன்றிய அரசின் நிறுவனத்திடம்தான் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து சூரிய மின்சார கொள்முதலைச் செய்கிறது. மின் கொள்முதலுக்கான விலையை நிர்ணயத்தை SECI செய்கிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த விலையை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என முடிவு செய்கிறது என மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் கையொப்பமிட்டது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சியில் திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்கிறது தமிழ்நாடு மின்வாரியம். திமுக ஆட்சியில் SECI யுடன் மட்டுமே, அதுவும் ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் என தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போதைய மாநில அரசின் அனைத்துவிதமான வரவு செலவும் SECI- யுடன் மட்டுமே உள்ளது தவிர எந்தவிதமான தனிப்பட்ட நிறுவனங்களுடனும் இல்லை. தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின்வாரியங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று மின்சாரத்தை விற்கும் புரோக்கராக SECI செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடுகிறது. அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.