"150சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு காப்பீடு தொகை கிடையாது" - அதிர்ச்சி தகவல்!

 
bike

150 சிசிக்கு மேற்பட்ட பைக்கை ஓட்டிச் சென்று உயிரிழந்தால் இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படாது என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்படுவது வழக்கம். வாகனம், வாகன ஓட்டி, எதிரில் வருபவர்கள் என அனைத்திற்கும் காப்பீடு எடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. புதிய வாகனம் எடுக்கும் பட்சத்தில் எதிரில் வருபவர்களுக்கு ஐந்து வருடங்கள் காப்பீடு போடப்படுகிறது. பம்பர் டூ பம்பர் காப்பீடும் அமலில் உள்ளது. விபத்தின்போது வண்டிக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதை காப்பீட்டு நிறுவனமே சரி செய்து தரும். மக்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது கட்டாயம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

bike

அரசு மற்றும் தனியார் சார்பில் பல மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் உள்ளது. காப்பீடு செய்திருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது நாமினிக்கு காப்பீடு தொகை வழங்கப்படும். இதுவே அமலில் இருக்கும் நடைமுறை. இந்த நிலையில், 150சிசி மேல் உள்ள வாகனத்தில் சென்று உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு செல்லுபடி ஆகாது என இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 346சிசி பைக்கில் சென்ற நபர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் காப்பீடு தொகையை கோரியுள்ளனர். அதற்கு அந்த தனியார் நிறுவனம், உயிரிழந்தவர் 346 சிசி பைக்கில் சென்று இறந்துள்ளார். 150சிசி பைக்கில் சென்று விபத்து ஏற்பட்டால் மட்டுமே காப்பீடு செல்லுபடியாகும். எனவே,  காப்பீடு வழங்க முடியாது என்று கூறியுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த பதில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனம் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென பலர் வலியுறுத்தி வருகின்றனர்.