இனி சக்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: உலகம் முழுவதும் உடனடி அமல்..!
இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுலா விசா, மாணவர் விசா, வணிக விசாவைப் பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர் உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்குகின்றனர். அமெரிக்க அரசின் சுகாதார திட்டப் பலன்களை வெளிநாட்டினரும் பெறுகின்றனர். இதனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
இதை தடுக்க, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், விசா விண்ணப்பதாரர்களின் வயது, நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன்படி, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இனிமேல் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும், தொற்று நோய் அபாயம் குறித்தும், நிதி நிலைமை குறித்தும் விரிவாக விசாரணை நடத்தும். அமெரிக்காவுக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களின் சொந்த செலவிலேயே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு தரப்பில் எவ்வித உதவியும் வழங்கப்படாது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்படும். இது தொடர்பாக விசா விண்ணப்பதாரர்களிடம் உறுதிமொழியும் பெறப்படும்.
மருத்துவர்கள் நியமனம்: தற்போதைய சூழலில் பல்வேறு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே, விசா அதிகாரிகளே, விண்ணப்பதாரர்களின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்துவார்கள். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
முந்தைய நடைமுறைகளின்படி விசா விண்ணப்பதாரர்களிடம் காச நோய், எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. இனி அனைத்து நோய்கள் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய விசா கட்டுப்பாடு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிரீன் கார்டு கோரி ஒரு லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். முந்தைய காலத்தில் பலருக்கு கிரீன் கார்டு கிடைத்தது. டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கிரீன் கார்டு கனவு கலைந்துவிட்டது.
அமெரிக்க அரசின் எச்1பி விசா பெறுவோரில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இதை தடுக்க எச்1 பி விசா கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பாதிப்பு இருந்தால் விசா விண்ணப்பத்தை நிராகரிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இனி நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள இந்திய மென்பொறியாளருக்கு எச்1 பி விசா கிடைக்காது.அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் மென்பொறியாளர்களில் 3 பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார். அவர்களை சந்திக்க இந்தியாவில் இருந்து பெற்றோர், மனைவி, பிள்ளைகள் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்து செல்வது வழக்கம். இனிமேல் அவர்களுக்கும் அமெரிக்க விசா கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர்.


