பெரியசாமி அமைச்சர் தொடர்புடைய ரெய்டில் பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை”- ED
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நேற்றைய ரெய்டில், பணம் நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என ED தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திராணி ஆகிய 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (16.8.2025) அன்று சோதனை நடத்தியுள்ளனர். 10 மணி நேரத்தைக் கடந்தும் அமலாக்கச் சோதனையை நடத்தியது. 2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி அவர்கள் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2022-ல் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். அந்த வழக்கின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தியது.
இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நேற்றைய ரெய்டில், பணம் நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என ED தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் சொத்து ஆவணங்கள் முதலீடு தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவை மட்டும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


