"செந்தில் பாலாஜி ஏதாவது சொல்லி விடுவார் என முதலமைச்சர் அச்சத்தில் உள்ளார்" - ஈபிஎஸ் பதிலடி!!

 
ep

அதிமுகவை சேர்ந்த யாரும் எந்த கட்சிக்கும் அடிமையாக இல்லை; சொந்த காலில் நிற்கின்றவர்கள் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியிருந்தார். அதேபோல் அதிமுகவையும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக்கு  எடப்பாடி பழனிச்சாமி  பதிலுரை அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

stalin

அதில், செந்தில் பாலாஜி செய்த ஊழல் குறித்து விசாரித்து அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது பற்றி நேற்று முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதில் என்னை பற்றியும், அதிமுக பற்றியும் கூறியிருந்தார். செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதன் அடிப்படையிலேயே ரெய்டும் நடந்தது. அதோடு அவரை விசாரித்து கைதும் செய்துள்ளார்கள். பத்திரிக்கையாளர்களிடம் ஒத்துழைப்பேன் என்று கூறியவர், அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்துள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

eps

முதல்வர் அவருக்கு பரிந்து பேசுகிறார், பதற்றத்தோடு பேசுகிறார். இந்த பதற்றத்திற்கு என்ன காரணம். அதிமுக ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய ஆட்சியை மக்கள் கொடுத்தார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை.பொம்மை முதல்வராக, எதுவுமே தெரியாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். எல்லா வகையிலும் பணம் சுருட்டுகிறார். 30,000 கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் செந்தில் பாலாஜியும், சபரீசனும் இருப்பதாக பி.டி.ஆரே சொன்னார். செந்தில் பாலாஜி ஸ்டாலின் குடும்பத்திற்கு கொடுத்த அந்த பணத்தை பற்றி சொல்லிவிடுவாரோ, அப்படி தன் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, ஆட்சியும் பறிபோகுமோ என்று தான் பதறிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.



இரண்டாண்டு திமுக ஆட்சியில் எந்த துறையிலும் வளர்ச்சி இல்லை. ஆனால் ஊழல் மட்டும் எல்லா துறையிலும் வளர்ந்துள்ளது. என் மீது வழக்கு தொடுத்த ஆர்.எஸ் பாரதியே, அதை திரும்பப் பெறுவதாக சொன்னபோது, வழக்கை தொடர்ந்து சந்திப்பதாக நான் சொன்னேன். என் மீது தொடக்குப்பட்ட பொய் வழக்கை சந்திப்பதாக தைரியமாக நான் சொன்னது போல இப்போது முதல்வர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா? செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க ஸ்டாலின் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.