அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது- தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஊதிய முரண்களை களைய வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ விடுப்பை தவிர சாதரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் இன்று எடுக்கக்கூடாது என எச்சரித்துள்ள தமிழக அரசு, காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.


