‘பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்..’ ஆட்சியில் பங்கா?? அதுக்கு நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல - பழனிசாமி..
ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பிரச்சாரப் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து உரையாடி வருகிறார். அந்தவகையில் திருத்துறைப்பூணியில் பேசிய அவர், “பழனிசாமி அவரது உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் இருவர் பேசியிருக்கிறார். கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி இதையே எத்தனை முறை சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். அப்படியே சொன்னாலும் பொய்யை பொருந்த சொல்ல வேண்டும். என் சம்பந்தி விட்டில் ரெய்டு நடக்கவில்லை. இப்படியெல்லாம் பேசி, நான் ஸ்டாலினை பற்றி பேசுவதை குறைத்துகொள்ள வேண்டும் என்பதற்காக மறைமாற்றும் விதமாக அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.
அமைச்சர் நேரு அவர்களே.., சட்டபேரவை நடந்துக்கொண்டிருந்த போது பாதியில் எழுந்து சென்றீர்கள். உங்கள் குடும்பத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. உங்கள் தம்பி வீட்டில் வருமான வரித்துறை ரெய்சு. உங்கள் மகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததா? இல்லையா? இவ்வளௌ அழுக்கை வைத்துக்கொண்டு எங்களை விமசனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது.. நீங்கள் யார் சொல்லி பேசுகிறீர்கள் என்பது தெரியும். எத்தனை முறை பேசினாலும் பொய், பொய் தான்.

நான் சொந்த காலில் நின்று உழைத்து கட்சி தொண்டர்களை ஆதரவு பெற்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அப்படியென்றால் எந்த அளவுக்கு உழைத்து இருப்போன் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். யாருடைய சிபாரிசு மூலமும் வரவில்லை. உங்களைப்போல் உங்கள் அப்பாவின் அடையாளத்தை வைத்து நான் முதலமைச்சர் ஆகவில்லை. கட்சியின் தலைவராகவும் ஆகவில்லை.
நாங்கள் (அதிமுக) யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்; அது எங்கள் விருப்பம். அதிமுக பாஜக கூட்டாணியை பார்த்து பயம் வந்துவிட்டது. அதிமுக வெற்றி பெற்றால் பாஜவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்களா? என்று முதல்வ்ர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்களைப் போல வாரிசுக்காக ஆட்சிக்கு வர நாங்கள் துடிக்கவில்லை.
நீங்கள் கூட்டணி வைக்கும்போது பாஜக நல்ல கட்சி. அதே நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா? அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஜால்ரா தட்டுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவுடன் கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணி வைத்திருக்கின்றனர். பிறகு நாங்கள் கூட்டணி வைக்கும்போது மட்டும் எதற்கு பயப்படுகிறீர்கள்?

மக்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். எங்களுக்கு இந்த மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. திமுக ஓர் ஊழல் கட்சி. அதை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அந்த நிலைப்பாட்டில்தான் பாஜக எங்களுடன் இணைந்திருக்கிறது.
இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வர இருக்கின்றன. சரியான நேரத்தில் அவர்கள் வருவார்கள். உங்களுக்கு சரியான நேரத்தில் மரண அடி கொடுப்போம். கவலைப்படாதீர்கள். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறீர்கள். நீங்கள் கனவில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். நிஜத்தில் அதிமுக கூட்டணிதான் ஜெயிக்கும். இதை மடைமாற்றம் செய்து மக்களை குழப்பி ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்” என்று என்று பழனிசாமி பேசினார்.


